சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார்

தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், 01.8.2020 முதல் 12 சென்னை பெருநகர காவல் மாவட்டங்களில் சிறப்பு சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு, பொதுமக்களின் இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், இணையவழி பணிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மோசடி கும்பலை கைது செய்து, பொதுமக்களின் பணத்தை மீட்டு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இத்துடன் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களும், இந்த மாவட்ட சைபர் குற்றப்பிரிவின் IMEI தகவல் திரட்டும் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்படி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 08.10.2020 அன்று காலை 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கு தலா ஒரு மடிக்கணினி என 12 மடிக்கணினிகள் வழங்கினார். பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் காவல் அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர்.A.அமல்ராஜ், இணை ஆணையாளர் (தலைமையிடம்) S.மல்லிகா, துணை ஆணையாளர்கள் S.விமலா (நுண்ணறிவுப்பிரிவு), K.ஶ்ரீதர்பாபு (நுண்ணறிவுப்பிரிவு), பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.