குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சென்னை, சானிடோரியம், சுந்தரம் காலனி 3வது தெரு, ஶ்ரீ பாலாஜி பிளாட்ஸ், எண்.1 என்ற முகவரியில் வசிக்கும் தேசாபிமானன், வ/58, த/பெ.பொன் ராஜகோபாலன் என்பவர் கடந்த 25.9.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மாலை திரும்ப வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த டிவி, 21 கிராம் எடை கொண்ட 3 தங்க மோதிரங்கள் மற்றும் 230 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது. இது குறித்து தேசாபிமானன் S-13 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

S-13 குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், குற்றவாளியின் கைரேகைகளை கைப்பற்றி ஆய்வு செய்தும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தமீம் அன்சாரி, வ/31, த/பெ.இப்ராகிம், எண்.114,கண்ணபிரான் கோயில் தெரு, பல்லாவரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கிராம் எடை கொண்ட 3 தங்க மோதிரங்கள் மற்றும் 230 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் குற்றவாளி தமீம் அன்சாரி மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.