எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் ‘சூரரைப் போற்று’ பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தியுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம்.
தான் நடித்து வரும் படங்களின் பணிகளை ஒவ்வொனெறாக முடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அகிலன் கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனே தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
முழுக்க காதலை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஆகையால் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 55 நாட்களில் ஒட்டும்மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். கண்டிப்பாக அவை அனைத்துமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் அகிலன்.
தொழில்நுட்பக் குழுவினர் விவரம்: இயக்குநர்: டி.வி.அகிலன், தயாரிப்பு நிறுவனம்: நவீரா சினிமாஸ், தயாரிப்பாளர்: இஷானி சஜ்மி சலீம், நிர்வாக தயாரிப்பாளர்: பி .சூர்யபிரகாஷ்
இணை தயாரிப்பாளர்கள்: சாஜினாஸ் சலீம், சாதிக் சலீம், இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவாளர்: எம்.ஏ.ராஜதுரை, எடிட்டர்: டி. சிவனாதீஸ்வரன், கலை இயக்குநர்: தாமு
சண்டைக் காட்சிகளின் இயக்குநர்: டேஞ்சர் மணி, ஆடை வடிவமைப்பாளர்: சைத்தன்யா ராவ்
மேக்கப் : குப்புசாமி, பி.ஆர்.ஓ: யுவராஜ்.