சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிளைய்ட்IX-1644-ல் சனிக்கிழமை இரவு துபாயில் இருந்து சென்னை வந்த எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது(38) என்ற பயணி, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையை அடுத்து, தங்கத்தை பசை வடிவில் மாற்றி தமது ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டார். அவரைத் தனிமைப்படுத்தி சோதனை செய்த போது அவரது ஆசனவாயில் இருந்து பசை வடிவிலான இரண்டு தங்கப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க பசையில் இருந்து 179 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இது தவிர அந்த பயணியிடம் இருந்து பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 50 கிராம்கள் எடை கொண்ட இரண்டு தங்கத்துண்டுகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் அந்தப் பயணியிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 229 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இன்னொரு வழக்கில் முன்னதாக துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஏ1 906-ல் வந்த மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் ஜைலானி(34) என்ற பயணி, வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட தனிப்பட்ட சோதனையில் அவரது ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான இரண்டு தங்கப்பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. சுங்க சட்டத்தின் கீழ் தங்க பசையில் இருந்து 11.96 லட்சம் மதிப்பிலான 228 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. சுங்க சட்டத்தின் படி மொத்தம் ரூ.23.96 லட்சம் மதிப்புள்ள 457 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமானநிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.