தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இதுவரை அந்த சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்பும் இந்த சட்டத்தின் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15-ஆம் தேதி அமைச்சரவை கூடி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் சில ஆலோசனைகளை வழங்கி திருப்பி அனுப்பினார், ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டமன்றப் பேரவையில் அவசரச் சட்டத்திற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க முடியாது என்று ஆளுநர் மறுக்க முடியாது. அந்த சட்டங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதுகுறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். மாநில அரசின் விளக்கத்தை ஏற்று சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது சட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பிய சட்டத்தை அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அவர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என அரசியலமைப்பு சாசனம் சட்டம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக அளுநர் அரசியலமைப்பு சாசன சட்டத்தின்படி நடக்காமல் பாஜகவின் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே அரசு என்ற கொள்கையை தமிழகத்தின் மீது திணித்து வருகிறார். தமிழக ஆளுநரின் இச்செயல் மாநில அரசின் உரிமைகளை நசுக்கி கூட்டாட்சித் தத்துவத்தை நொறுக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 8,41,251 மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைத்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டத்தின் படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 300 மருத்துவ இடங்கள் கிடைக்கும். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக ஆளுநர் இந்த அவசரச் சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.