அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

கடந்த் 2017 டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். அதன்பின்னர் அவரின் அரசியல் வருகை குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் பேட்ட தர்பார் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் அண்ணாத்த சூட்டிங் நடைபெறவில்லை. மேலும் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பும் ரஜினியிடம் இருந்து வரவில்லை. இதனால் ரஜினி கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உலா வந்தது. இந்த நிலையில் ரஜினி பெயரில் ஓர் அறிக்கை இணையத்தில் பரவப்பட்டது.

அதில் அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுவதால் இப்போது கட்சி துவங்க இயலவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வைரலானது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று சிலர் நையாண்டி செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் சற்றுமுன் ரஜினி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், என் பெயரில் வலம் வந்த அந்த அறிக்கை பொய்யானது. ஆனால் அதில் என் உடல் நலம் பற்றி சொல்லப்பட்ட விஷயம் உண்மை. விரைவில் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.