பாரதிய ஜனதா கட்சி 06.11. 2020 அன்று திருத்தணியில் தொடங்கி, ஆறுபடை வீடுகளையும் இணைக்கும் வகையில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவித்திருந்தது. பாஜக நடத்தும் வேல் யாத்திரை வெறுப்பு அரசியலை வளர்க்கும் தீய நோக்கம் கொண்டது. சமூக நல்லிணக்கத்தை சிதைத்து, சீரழித்து படுதுயரங்களை உருவாக்கும் என பலதரப்பினரும் சுட்டிக்காட்டி, வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கலான வழக்கில் “வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதேசமயம் கெரோனா நோய் தொற்றுப் பரவல் இரண்டு, மூன்றாம் கட்ட அலைகளாக பரவும் அபாயம் என்பதை மட்டும் காரணமாக கூறியிருப்பது, வேல் யாத்திரையால் சமூக வாழ்வில் ஏற்படும் எதிர்விளைவின் பேராபத்தை அரசு கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை பாதுகாக்க வேண்டும். சமூக அமைதியை பாதுகாக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகும். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற முடிவில் தமிழ்நாடு அரசு உறுதி காட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.