மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க், மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய கல்வி தின விழாவைக் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ஆம் தேதி, நாடு முழுவதும் கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான டாக்டர் கே கஸ்தூரிரங்கன் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, “இந்தியாவில் தங்குங்கள், இந்தியாவில் படியுங்கள், கல்வியை உலகத்தரம் ஆக்குங்கள்” என்று உலக அளவில் கல்வித்துறையில் இந்தியாவை முன்னோடியாக உயர்த்த உறுதி பூண்டுள்ளோம். உயர் தரமான கல்வியை வழங்குவதற்கு உலகிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, உலகின் 100 முன்னணி பல்கலைக்கழகங்களை இந்தியாவில் வளாகங்களை அமைக்க தேசிய கல்வி கொள்கை 2020-இன் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை 2020- ஐ செயல்படுத்துவதன் வாயிலாக நாட்டின் கல்வி முறை பெரும் மாற்றமடையும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் பயனடையும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மாணவர்கள் உபயோகிக்க வேண்டும் என்று கூறிய அவர், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் சுபாஷ் சௌதுரி, 2019ஆம் ஆண்டின் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதுகளை வழங்கினார்.