ஹஜ் பயணம் செல்வதில் கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகம்தான் முன்னோடியாக இருக்கிறது. அந்தமான் பாண்டிசேரியுலுள்ள ஹாஜிகள் எல்லோரும் சென்னையிலிருந்துதான் செல்வார்கள். தற்போது மத்திய அரசு கோவிட் 19க்காக 26 விமான நிலையங்களுக்குப் பதிலாக 10 விமான நிலையங்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது. அதில் சென்னை விமான நிலையம் விடுபட்டிருக்கின்றது. அதற்குக் காரணம் சென்னையில் அரசுக்கு சொந்தமான ஹஜ் இல்லம் இல்லை என்பது ஒரு குறையாகத்தான் உள்ளது. ஆனால் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செக்ஷன் 110 லில் இந்த ஆண்டே அரசு சார்பில் ஒரு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்கள். அதற்கு நன்றி. கூடிய விரைவில் அதற்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று இந்திய ஹஜ் அசோஷியேசன் சார்பிலும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன். தற்போது ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருமான வரி செலுத்திய சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற தமிழக அரசு கேட்கிறதே என்று பலர் என்னிடம் கேட்டார்கள். அது தவறு, தமிழக அரசு ஹஜ் பயணத்திற்கு எந்த வருமான சான்றிதழும் கேட்கவில்லை, எந்த வரியையும் விதிக்கவில்லை. மத்திய அரசுதான், ஹாஜிகள் இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறார்களே அதை வருமான வரிக்குள் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று பரிசீலணைதான் செய்தார்கள். அதற்கு நாங்கள் மத்திய சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு முக்தா அப்பாஸ்சுடன் இரண்டு மூன்று முறை கலந்து ஆலோசித்து வந்துள்ளோம். எங்களுடைய கருத்துக்களை மத்திய நிதியமைச்சருக்கும் தெரிவித்துள்ளோம். கூடியவிரைவில் ஹஜ் பயணிகள் வருமானவரி சான்றிதழை சமர்பிக்கும் விதியை மத்திய அரசு தளர்த்தி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏன் என்றால் மொத்தமே 2 லட்சம் ஹஜ் பயணிகள்தான் இந்தியாவிலிருந்து செல்வார்கள். அவர்களில் 97 சதவிகிதம் பேர் வருமான வரி கட்டமுடியாத நிலையில்தான் அவர்களது வருமானமும் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் உள்பட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள அரசியல் தலைவர்களும் அரசியலில் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்ல மற்ற அமைப்பின் தலைவர்களும், வருமானம் இல்லாத ஹஜ் பயணிகளுக்கு தேவையில்லாத வேலைப்பளுவும் நேரமும் அதிகரிக்கும் என்பதால் இந்த வருமானவரி விதியை தளர்த்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் என்ற முறையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.