தேசிய சூப்பர் கணினியியல் இயக்கத்தின் (NSM) கீழ் முன்னேறிய கணினியியல் மேம்பாட்டு மையத்தில் (C-DAC) நிறுவப்பட்டுள்ள உயர்திறன் செயற்கை நுண்ணறிவு கணினியான பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த 500 பகிரப்படாத கணினி அமைப்புகளில் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2020 நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னேறிய பொருட்கள், கணினி சார்ந்த வேதியியல் மற்றும்
வானியற்பியல், மருந்து வடிவமைப்பு, தடுப்பு சுகாதார சேவை அமைப்பு ஆகியவற்றை இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு வலுப்படுத்தும். மும்பை, தில்லி, சென்னை, பாட்னா, கவுகாத்தி ஆகிய வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய நகரங்களில் உள்ள வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்கும் இது வலுவூட்டும். கொவிட்-19-க்கு எதிரான போரில் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளை இது துரிதப்படுத்தும். தேசிய நடுத்தர ரக வானிலை முன்னறிவிப்பு மையம்,
இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனம் ஆகியவற்றின் வானிலை முன்னறிவிப்பு தொகுப்புகளுக்கு இந்த சூப்பர் கணினி அமைப்பு வரப்பிரசாதமாக அமையும். எண்ணெய் மற்றும் எரிசக்திக்கான புவி ஆய்வு, விமான வடிவமைப்பு படிப்புகள், கணினி இயற்பியல், கணிதப் பயன்பாடுகள், இணைய வழி கல்வி முறை ஆகியவற்றுக்கும் கூட இது உதவும். “உலகத்தின் மிகப்பெரிய சூப்பர் கணினி உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று
விளங்குகிறது. பரம் சித்தி, உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கணினி அமைப்புகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது வரலாற்று சாதனையாகும்,” என்று அறிவியல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.