தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை ஓரளவு தன்னால் முடிந்தவரை நிரப்பி வருகிறார் யோகிபாபு. இருந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. இந்த நிலையில் தான் காமெடி ஏரியாவில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் திருச்சி
சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்து முடித்துவிட்ட இவர், தற்போது இன்னும் அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் .
சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம் லைட்டுக்குள் வந்தவர்தான் இந்த டிஎஸ்கே. “பெட்ரோமாக்ஸ் படத்திற்கு முன்பே கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருந்தாலும் பெட்ரோமாக்ஸ் படம் தான் எனக்கு நல்ல வரவேற்பு தந்தது. அதிலும் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம், தமன்னா என்னுடைய பெயரை தவறாமல் குறிப்பிட்டு பேசியது ரசிகர்கள் மத்தியில் என்னை இன்னும் கொஞ்சம் பிரபலமாக்கியது” என
ஓபனாகவே பேசுகிறார் டிஎஸ்கே.
“தற்போது சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை இயக்குனர் சசியின் சிஷ்யரான சந்தோஷ் ராஜன் என்பவர் இயக்குகிறார். சிவா மனசுல சக்தி படத்தைப்போல கலகலப்பான படமாக இது இருக்கும். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்து கோவைக்கு கிளம்ப இருக்கிறோம். படத்தின் நாயகன் ஜீவா என்னுடன் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு நல்ல நண்பராகி விட்டார். ராட்சசன்
படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படத்தில் பரத், லாஸ்லியா, பூர்னேஷ் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். ராட்சசன் படத்தை விட, ஒருபடி அதிகமான ஹாய் வோல்டேஜ் த்ரில்லர் படமாகவே இது இருக்கும். இந்த படத்தின் இயக்குனர் ராஜசரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே என்னுடைய மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள். அதனால் இந்தப்படத்தில் நான் நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை எனக்குத்தான் கொடுக்க வேண்டுமென அவர் குடும்பத்திலேயே பலத்த சிபாரிசு எனக்கு இருந்தது.
அதேபோல யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய இயக்குனர் டீகே தற்போது இயக்கியுள்ள ஆந்தாலஜி படதில் இடம்பெற்றுள்ள, ஐந்து குறும் படங்களில், ஃபேன்டஸி கலந்த காமெடி படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். காமெடியை தாண்டி இதில் வேறு விதமான நடிப்பை, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளேன். ஜிவி பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தில் ஒரு புதிய முயற்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் இயக்குநர் சண்முகம் கூட, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தபோது என்னிடம், “காமெடி மட்டுமல்ல, உன் முகத்திற்கு வில்லன் ரோல், கேரக்டர் ரோல் எல்லாமே அழகா செட் ஆகும்” என்று நம்பிக்கை அளித்து இந்தப்படத்தில் நடிக்க வைத்தார். படத்தில் நடித்தபோது அதை என்னாலேயே உணர முடிந்தது.
இந்தப்படத்தில் அரசியல்வாதியான சரத்குமாருக்கு வலதுகை போன்ற கேரக்டர் எனக்கு. இந்தப்படத்தில் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் இடம்பெற்ற ஒரு முக்கியமான பொதுக்கூட்ட காட்சியின் போது சரத்குமாரை அருகில் வைத்துக்கொண்டே ஆறு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி கைதட்டல் வாங்கினேன். மீண்டும் ஒருமுறை குளோசப் ஷாட் வேண்டும் என கேட்டபோது, அதையும் ஒரே டேக்கில் பேசி நடித்தேன். அந்த காட்சி முடிந்ததும் சரத்குமார் எனது தோளில் தட்டிக்கொடுத்து, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று பாராட்டினார். .
எனக்கு விவரம் தெரிந்து தியேட்டரில் பார்த்த படம் என்றால் சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தான்.. இதை அவரிடமும் கூறினேன்.. இப்போது அவருடன் இணைந்து நடித்து, அவரிடமிருந்தே
பாராட்டு பெற்றது என்னால் மறக்க முடியாத ஒன்று. பெட்ரோமாக்ஸ் படத்தில்கூட அந்நியன், காளகேயா, நித்தியானந்தா என பலவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தாலும் அவற்றை யெல்லாம் கூட ஒரே டேக்கில் தான் ஓகே பண்ணினேன். இதுதவிர போலீஸ் பின்னணியில் உருவாகியுள்ள புனிதன் என்கிற பைலட் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளேன். பாபி ஜார்ஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும்
பொதுமக்கள் பார்வைக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம்… விரைவில் இதை முழுநீள திரைப்படமாகவே எடுக்கும் ஐடியாவும் இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் உரிய நேரத்தில் வெளியாக இருக்கிறது..
இது ஒருபக்கம் இருக்க, விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் பினாலே வரை வந்தேன். பினாலே நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர்களை பற்றியும் அவர்களது கஷ்டங்களை பற்றியும் வெளிப்படுத்தும் விதமாக நானும்
எனது மனைவியும் இணைந்து பெர்ஃபார்மன்ஸ் செய்தோம். அதற்கு எங்கள் இருவருக்குமே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.. இயக்குநர் சசிகுமார், பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் என்னை அழைத்து பாராட்டினார்கள். காமெடியை தாண்டி என்னால் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி பெற்று தந்தது., சினிமாவில் வாய்ப்புகள் நிறைய தேடிவர ஆரம்பித்தாலும் சின்னத்திரையை விட்டு தற்போதைக்கு விலகுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.. என்னை வளர்த்து விட்டது இந்த சின்னத்திரை தான்.. தற்போது அவர்களும் ஒவ்வொரு கட்டமாக என்னை உயர்த்திக்கொண்டே தான் செல்கிறார்கள் அதனால் சின்னத் திரை பயணமும் ஒரு பக்கம் தொடரவே செய்யும். தவிர சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டுக்கும் பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை” என்கிறார் டிஎஸ்கே உறுதியாக.
டிஎஸ்கே விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதால் அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேச்சை திருப்பினோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை, உங்களை தேடி வாய்ப்பு வரவில்லையா, வந்ததை மறுத்து விட்டீர்களா என்கிற கேள்வியை முன் வைத்தோம். “நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவில்லை என்பதை விட, விஜய் டிவியில்
இருந்து இத்தனை பேர் தான் பிக்பாஸில் பங்கேற்க வேண்டும் என்கிற ஒரு கணக்கு இருந்தது அந்த அளவிற்கு ஏற்ப தான் விஜய்டிவி பிரபலங்களும், போட்டியாளர்களாக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, அர்ச்சனா, ஆஜித், நிஷா, வேல்முருகன், ஆரி என அனைவருமே எனக்கு நன்கு பழக்கமானவர்கள்தான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது ஆரியை தவிர அனைவருமே சற்று வித்தியாசமாகத்தான் தெரிகிறார்கள் .
ஆரி அட்வைஸ் பண்ணுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. அவர் வழக்கமாகவே எப்போதும் நமக்கு பயன்படும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்.. அது அவரது இயல்பு. அதைத்தான் உள்ளேயும் அவர் வெளிப்படுத்துகிறார். அனிதாவும் எனக்கு நன்கு பழக்கமானவர். சொல்லப்போனால் தனுசு ராசி நேயர்களே
படத்தில் எனக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார். அந்தப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லி நடித்தார் அனிதா சம்பத். ரியோவை பொருத்தவரை எப்போதுமே ஜாலியாக இருப்பார் மனதில் பட்டதை தான் பேசுவார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் கொஞ்சம் சீரியஸாக இருப்பது போலவே தெரிகிறது. அவர் ஜாலியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் கூட இருப்பவர்கள் விடமாட்டார்கள் என்பது போலத்தான் தோன்றுகிறது. அன்பு என்கிற ஒரு ஏரியாவில் நிச்சயமாக அவர் மாட்டிக் கொள்வார்.
ஆஜித்தை கூட சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.. ரொம்ப மரியாதையான பையன்.. ஆனால் முன்பு இருந்ததை விட, இப்போது அங்கே கொஞ்சம் மாறி இருக்கிறான். அந்த புதிய இடத்தில், புதியவர்களுடன் எப்படி பழகுவது என்கிற தடுமாற்றம் அவனுக்கு நிறையவே இருக்கின்றது. ஆனால் முன்னைவிட, இப்போது கொஞ்சம் ஓரளவுக்கு புரிந்து
கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் இவர்கள் எல்லோருமே கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.. இந்த இடத்திற்கு அவர்கள் வருவதற்கு நடத்திய போராட்டங்களும் எனக்கு தெரியும்.. எல்லோருக்குமே பெரும்பாலும் இரண்டு முகம் இருக்கும் இல்லையா அது ஒருகட்டத்தில் வெளிப்படத்தானே செய்யும்” என்கிறார் டிஎஸ்கே. மக்கள் தொடர்பு: ஜான்.