வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை வாழ் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அவசர தேவைக்கென உதவிடவும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பொதுமக்களின் அழைப்புகளுக்கு உடனடியாக சென்று உதவிட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் ஆளிநர்கள் மூலம் 12 இடர் மீட்பு குழுவினர், ரப்பர் படகுகள், கயிறுகள்,
காற்றடைத்த ட்யூப்கள், டார்ச் லைட், கடப்பாரை, சவுல் போன்ற இடர் மீட்பு உபகரணங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,
அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து, எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் ரோந்து சுற்றியும், அங்குள்ள பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்து வருகின்றனர்.