சென்னை பெருநகர காவல், C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலிசந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் அவர்களது மகன் சித்தல்குமார் வ/40 ஆகியோர், 11.11.2020 அன்று மதியம் 02.30 மணி முதல் மாலை 06.00 மணிக்குள் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் புகுந்து 3 நபர்களையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக, இறந்து போன தலிசந்த்தின் மகள் பிங்கி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ் குமார் அகர்வால் சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர் ஏ.அருண் மேற்பார்வையில், வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில், உதவி ஆணையாளர்கள் என். பாலகிருஷ்ண பிரபு (பூக்கடை சரகம்), எஸ்.லஷ்மணன் (இராயப்பேட்டை சரகம்), ராஜபால் (மிதக்கும் துறை முகம் சரகம்), ஜுலியஸ் சீசர் (வண்ணாரபேப்டடை சரகம்). காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து தனிப் படையினர் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து வந்தனர்.
தனிப்படையினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்த நபர்கள் கொலையில் ஈடுபட்டதும், இறந்துபோன சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, அவரின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் மற்றும் சில நபர்கள் சேர்ந்து மேற்படி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பேரில், காசிமேடு காவல் ஆய்வாளர் ஜவகர் தலைமையிலான தனிப்படையினர் எதிரிகளை தேடி புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று சென்னையில், சிசிடிவி பதிவில் கிடைத்த காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை கொண்டு, சோலாப்பூர் மாவட்ட தனிப்படையினருடன் இணைந்து 13.11.2020 அன்று அங்கு எதிரிகள் சம்பவத்தின்போது பயன்படுத்தி தப்பிச்சென்ற அதே காரை துரத்திச் சென்று பிடித்து, எதிரிகள் கைலாஷ் வ/32 (ஜெயமாலாவின் சகோதரர்) மற்றும் அவருடன் இருந்த கொல்கத்தாவை சேர்ந்த இரவீந்தரநாத் கர், வ/25, மற்றும் விஜய் உத்தம்காம்லே, வ/28, ஆகியோர்களை பிடித்து விசாரித்தபோது மேற்படி கொலையைச் செய்ததை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய 1 துப்பாக்கி, UP 16 AH 8340 பதிவு எண் கொண்ட கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும், மேற்படி கொலையில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளான ஜெயமாலா, விலாஷ் ஜலீந்தர் பாக்ரே (ஜெயமாலாவின் சகோதரர்), ராஜு ஷின்டே மற்றும் ராஜு துபே ஆகியோர் 21.11.2020 அன்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மேலும் 1 துப்பாக்கி, 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
2. கோயம்பேடு மார்கெட்டில் 3 ½ மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் 600க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்து குழந்தையை கடத்திய 2 இளஞ்சிறார்கள் உட்பட 6 நபர்கள் கைது. விழுப்புரம் மாவட்டம், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ். வ/29, த/பெ.ராஜா என்பவர் அவரது மனைவி சந்தியா மற்றும 3 ½ மாத பெண் குழந்தையுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் கடந்த 1 வருடமாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 08.11.2020 அன்று இரவு 11.00 மணியளவில் மேற்கண்ட கடை முன்பு உள்ள திண்ணையில் ரமேஷ், அவரது மனைவி சந்தியா மற்றும் 3 ½ மாத பெண் குழந்தையுடன் படுத்து உறங்கிவிட்டு, மறுநாள் (09.11.2020) அதிகாலை 05.00 மணியளவில் எழுந்து பார்த்தபோது பெண் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சந்தியா K-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் ஆணையாளர் (வடக்கு) ஏ.அருண் மேற்பார்வையில், இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) சி.மகேஸ்வரி, வழிகாட்டுதலின் பேரில் அண்ணாநகர் துணை ஆணையாளர் ஜி.ஜவஹர், தலைமையில், கோயம்பேடு சரக உதவி ஆணையாளர், K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர முருகேசன், உதவி ஆய்வாளர்கள் பூபதிராஜ், சுப்பிரமணி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை மைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் வந்த நிலையில் T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு குழந்தை கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அக்குழந்தை கடத்தப்பட்ட ரமேஷின் குழந்தை என தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு ரமேஷ் மற்றும் அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். மேலும் தனிப்படையினர் அம்பத்தூர்எஸ்டேட் 2வது மெயின் ரோடு பேருந்து நிறுத்தம் முதல் குற்றவாளிகள் சென்ற திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, காஞ்சிபுரம், மற்றும் பூந்தமல்லி வரை சுமார் 600க்கும்மேற்பட்ட சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், அண்ணாநகர் சைபர் குற்றப்பிரிவினரின் தொழில் நுட்ப கண்காணிப்பு உதவியுடன் மேற்படி குழந்தையை கடத்திய குற்றவாளிகள் 1.பாபு, வ/36, த/பெ.அபுபக்கர், எண்.15, அண்ணா தெரு, பழைய திருமங்கலம் ,சென்னை 2.கணேஷ், வ/24, த/பெ.சுப்பிரமணி, கந்தன் பார் பின்புறம், ரயில்வே ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம் 3.செங்குட்டுவன், வ/36, த/பெ.ராமன், இருமரம் கிராமம், வெண்பாக்கம் தாலுகா, சங்கர மல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் 4.காயத்ரி, வ/33, க/பெ.பாபு, பழைய திருமங்கலம், சென்னை மற்றும் 5.அவரது மகன் 17 வயதுடைய இஞ்சிறார் மற்றும் 6. 16 வயது மற்றொரு இளஞ்சிறார் என மொத்தம் 6 நபர்களை கைது செய்தனர். எதிரிகள் நால்வர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியும், இரண்டு இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி செங்குட்டுவன் அவருக்கு தெரிந்த அபிநயா என்ற பெண்ணுக்கு 8 வருடங்களாக குழந்தையில்லாததால், அவர்களுக்கு மேற்படி குழந்தையை ரூ.25 லட்சத்திற்கு விற்பதற்காக மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து கடத்திச் சென்றதும், அபிநயா குழந்தையின் ஆவணங்கள் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன்தான் குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறியதன்பேரில், செங்குட்டவன் கடத்திய குழந்தையை அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிறுத்தத்தில் வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
3 . கொலை வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது. R-9 வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில் கடந்த 1999 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.மணி (எ) மணிவாசகம், வ/53, த/பெ.காசி , எண்.5/616, ஜேசுநகர், தாளமுத்து நகர், தூத்துக்குடி 2.வினித் (எ) வினித்ராஜ், வ/47, த/பெ.ரத்தினசாமி, எண்.5/21, கிழக்குதெரு, படுக்கப்பத்து, தூத்துக்குடி மாவட்டம், 3.ஆனந்த் (எ) அறிவானந்தம், வ/57, த/பெ.காசிபழம், தெற்கு தெரு, சுண்டங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வி.அமுதா தலைமையில், உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, கடந்த 20 வருடங்களாக தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 4. எம்கேபி நகர் பகுதியில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட தலைமறைவு குற்றப்பின்னணி நபர் கைது. 1 கைதுப்பாக்கி, 4 தோட்டக்கள், 6 வெடிகுண்டுகள், 2 கத்திகள் பறிமுதல். சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும், தலைமறைவாக இருக்கும் குற்றப்பின்னணி நபர்களை பிடிக்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் எம.சி.ரமேஷ் தலைமையில், உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் 10.12.2020 அன்று மாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எம்.கே.பி நகர், வடக்கு அவென்யூ ரோடு அருகில் நடந்து சென்ற நபரிடம், ஒரு நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி டில்லிகணேஷ் (எ) தொப்பை கணேஷ், வ/30, த/பெ.ராஜ், எண்.360, 7 வது தெரு, பக்தவச்சலம் காலனி, வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் குற்றவாளி டில்லி கணேஷ் (எ) தொப்பை கணேஷ் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், அடிதடி வழக்குகள், வழிப்பறி வழக்குகள் என சுமார் 24 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், 3 தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும், நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகமல் தலைமறைவாகயிருந்து வந்ததும், முன்விரோதம் காரணமாக வியாசர்பாடியை பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் தற்போது பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. குற்றவாளி டில்லிகணேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கைத்துப்பாக்கி, 4 தோட்டக்கள், 6 வெடிகுண்டுகள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், 11.12.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.