J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருவான்மியூர் மாநகர பேருந்து டிப்போ முதல் மேட்டு தெரு வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை சீராக்கவும், வாகன ஓட்டிகள் சீராக செல்லவும் புதிய நவீன வழிவகைகளுடன் சென்னை போக்குவரத்து காவல்துறை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 11.12.2020அன்று மாலை துவக்கி வைத்தார். பின்னர், இச்சாலையை சீர்படுத்தி, இங்குள்ள மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளை, சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஏற்பாடு செய்து மக்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கும் என காவல் ஆணையாளர் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியின்போது, கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி சிறப்பித்தார்..
திருவான்மியூர் பகுதி மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வழங்கினார். உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து வரும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த 50 இளைஞர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, அறிவுரைகள் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கினார். போக்குவரத்து மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் புதிய பிரச்சார ஊர்தியை, காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை காவல் ஆணையாளர் வெளியிட்டு, குறும்படத்தை திரையிட்டு காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்த குழுவினருக்கு நினைவுப்பரிசினை காவல் ஆணையாளர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) மருத்துவர் என்.கண்ணன், இணை ஆணையாளர்கள் எஸ்.லஷ்மி, எம்.பாண்டியன் (போக்குவரத்து/வடக்கு), துணை ஆணையாளர்கள் வி.விக்ரமன், (அடையார்), என்.குமார், (போக்குவரத்து/தெற்கு), காவல் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.