சபரிமலையில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் தேவஸம்போர்டு ஊழியர்கள், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வரும் 26-ம் தேதி முதல் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்ட அலை வீசி வருகிறது. அங்கு நாள்தோறு 3 ஆயிரத்துக்கும் குறையாமல் புதிதாக தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏறக்குறைய 60 ஆயிரம்பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு சீசனுக்காக கோயில் திறக்கப்பட்டது.பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன்தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழுடன் வரவேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

தேவஸம்போர்டு அதிகாரிகள் தரப்பி்ல் கூறுகையில் “மண்டலபூஜை, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை திறக்கப்பட்டதில் இருந்து, இதுவரை சபரிமலையில் மட்டும் 51 பக்தர்கள், 245 தேவஸம்போர்டு ஊழியர்கள் என 299 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. வரும் 26-ம் தேதி மண்டல பூஜை முடிந்தபின், கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு வருவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில், கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கு நிலக்கலில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால்தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேவஸம்போர்டு தரப்பில் சபரிமலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஏற்கெனவே பிசிஆர் பரிசோதனை செய்து தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்களும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் பக்தர்களுக்கு கரோனா பரவல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும், ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.