ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் முடக்கியது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்து ள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த ஊழல் தொடர்பாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குத் தொடர்பாகவும் விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி நேற்று நடவடிக்கை எடுத்தது. அமலாக்கப் பிரிவின் இந்த நடவடிக்கைக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
”பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கப் பிரிவின் செயல் முழுக்க அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். எங்கள் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படு கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தேவையற்றவை. எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது, பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது. ஆனால், அந்த சொத்துகள் பரூக் அப்துல்லாவின் மூதாதையர்கள் சொத்துகள். அவருடைய சொத்துகளை முடக்கிவிட்டோம் என நியாயப்படுத்த முடியாது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடனும், ஜம்மு காஷ்மீர் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பேசும் அரசியல் தலைவர்களை அடக்கும் செயலாகும். மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து வருகிறது என்பதிலிருந்து திசைதிருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “என்னுடைய தந்தை வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவோம். நாங்கள் அனைவருமே குற்றமற்றவர்கள் என நம்புகிறோம். சமூக ஊடகங்களையும், ஊடகத்தையும் பாஜக நிர்வகிப்பதுபோல் இல்லாமல் நியாயமான விசாரணை நடத்த வேண்டும். என் தந்தையின் சொத்துகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுபவை என் மூதாதையர்கள் கடந்த 1970களில் வாங்கியவை. இந்தச் சொத்துகள் முடக்கத்துக்கு நியாயம் கற்பிக்க முடியாது. ஏனென்றால், இந்தச் சொத்துகள் யாரால், எப்போது வாங்கப்பட்டவை என்ற அடிப்படை விசாரணை, ஆய்வின்றி, முடக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.