துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் விமானத்தில், வன விலங்கின் உடல் பாகங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை வந்த எமிரேட்ஸ் இகே-544 விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில், பயணிகள் இருக்கை ஒன்றில் இரண்டு பேப்பர் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பொட்டலத்தில் இரண்டு சிறுத்தைப் பற்களும், மற்றொரு பொட்டலத்தில் ஒரு பல், சாம்பல் போன்ற பவுடருடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது. இவற்றை வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவை சிறுத்தைப் பற்கள் என உறுதி செய்யப்பட்டன. சிறுத்தை, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் படி பாதுகாக்கப்படும் உயிரினமாகும். உள்ளது. இதனால் இவை சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுத்தைப் பற்கள் அதிர்ஷ்டம் அளிப்பவையாகக் கருதப்படுவதால், இவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் இதை சிலர் கடத்தி வருகின்றனர். இவை சென்னை தாம்பரத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.