உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் வியாழன் அன்று துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (25) என்பவரை விமானநிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்தபோது அவரது உள்ளாடையில் காட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பிரித்துப் பார்க்கையில் அதில் 660 கிராம் தங்கப் பசை இருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 28.7 இலட்சம் மதிப்பில் 546 கிராம் எடையிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக புதன்கிழமை அன்று துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் பயணம் செய்த 11 பேரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனை செய்ததில் 2.53 கிலோ எடையில் 12 தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள் அவர்கள் தங்கள் உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 1.14 கோடி மதிப்பில் 2.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நிகழ்வில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்ற விமானத்தில் சென்னை வந்த மூன்று பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். தங்கள் உடலில் 831 கிராம் எடையிலான 5 தங்கப் பொட்டலங்களை அவர்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 36.40 இலட்சம் மதிப்பில் 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட்8517 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டார். அவர் தமது உடலில் 401 கிராம் எடையில் 2 தங்கப் பொட்டலங்களை மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 18.28 இலட்சம் மதிப்பில் 347 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ. 1.97 கோடி மதிப்பில் 3.72 கிலோ தங்கத்தை சுங்கச் சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.