தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் (TamilNadu Special Police) இருந்து பணி மூப்பு அடிப்படையில், 1,483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3,019 காவலர்கள், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படைக்கு பணிமாறுதல் பெற்று அறிக்கை செய்தனர். ஆயுதப்படை பணிக்கு புதிதாக வந்துள்ள 3,019 ஆண் மற்றும் பெண் காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 08.01.2021 அன்று மாலை, புதுப்பேட்டை இராஜரத்தினம் மைதானத்தில் சந்தித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். சென்னை, ஆயுதப்படையிலிருந்து பணிமூப்பு அடிப்படையில் கடந்த மாதம் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரிவில் பணிபுரிய 2,200 ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இனி வரும் காலங்களில் ஆயுதப்படையில் பணிபுரிய உள்ள காவலர்களாகிய நீங்களும் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையின் சார்பில் சவாலான செயல்களை திறம்பட செய்திடவும், மிகுந்த கவனத்துடன் பணிபுரிந்து, சென்னை பெருநகர காவல்துறையின் மாண்பினை காக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். கொரோனா பேரிடர் காலத்திலும், நிவர் புயலின்போதும், சென்னை பெருநகர காவல்துறையினர் மனந்தளராமல் பணி செய்து, பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபட்டது போல பணி செய்திட வேண்டும் எனவும், மேலும், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், ஆயுதப்படை காவல் உயரதிகாரிகளை சந்தித்து தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளவும், உயரதிகாரிகள்,காவல் ஆளிநர்களின் நலனுக்காக எப்பொழுதும் உடனிருப்பார்கள் என கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.A.அமல்ராஜ்,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), எஸ்.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.