இலங்கையில் உள்ள யாழ்பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் – நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் இரவு நேரத்தில் கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றிலும் தமிழர்கள் நிராகரிக்க முடியாத பங்களிப்பு ஊடும், பாவுமாக பிணைந்து வருகிறது. இதில் தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதால் முரண்பாடுகளும், மோதல்களும் தொடர்கின்றன. இறையாண்மை கொண்ட தேசத்தில் அனைத்து உரிமைகளையும் பெற்று கண்ணியமாக வாழும் உரிமைக்காக போராடி வரும் தமிழர்களின் கோரிக்கைகள் மீது அரசியல் ரீதியான தீர்வுகாணும் வரை போராட்ட வேட்கை தணியாது என்பதை பேரினவாத அரசு உணர வேண்டும். யாழ்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை ராணுவம் மேற்கொண்டிருக்கும் இழி செயலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்து, இடிக்கப்பட்ட நினைவு முற்றத்தை உடனடியாக இலங்கை அரசு கட்டியமைக்க வலியுறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.