அஜய் பிரதீப் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகிறது ‘சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’ . உலகமே கொண்டாடும் காவியமான அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் திரைக்காவியமாக வேண்டும் என்பது மறைந்த நடிகர் எம்ஜிஆரின் கனவு. அக்காவியத்தின் மீது அவர் கொண்ட தீராக் காதலால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுப்பதற்கான உரிமையைப் பெற்று வைத்திருந்தார். பின்னர், அவரே அந்த உரிமையை தேசியமயமாக்கி கலைஞர்களுக்கு வாயில் கதவைத் திறந்து வைத்துச் சென்றார். எம்ஜிஆரின் மனதுக்கு நெருக்கமான அவரது வாழ்நாள் கனவான அந்த விஷயம் இன்று நனவாகவிருக்கிறது. ஆம், அஜய் பிரதீப்பின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகிறது ‘சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’. 125 மணி நேரம் ஓடும் முழுநீளத் திரைப்படமாகவே எடுக்கப்படவிருக்கிறது. ஆனால் அதை அப்படியே திரைப்படமாக ரிலீஸ் செய்வது சாத்தியமில்லை என்பதால், அதை வெப் ஃபிலிம் சீரிஸாகக் குறுக்கி பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த வெப் சீரிஸானது முதல் 4 மாதங்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும். 4 மாதங்கள் கழித்து வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் ஒரு மணி நேரம் என மாதம் தலா 8 மணி நேரம் ஒளிபரப்பாகும். மொத்தம் 9 சீசன்களாக ஒளிபரப்பாகும். ஒவ்வொரு சீசனுக்கும் இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எடர்னிட்டி மோஷன் கிராஃப்ட் பிரைவேட் லிமிடட் மற்றும் எடர்னிட்டி ஸ்டார் இணைந்து இந்த வெப் ஃபிலிம் சீரிஸைத் தயாரிக்கிறது. திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் அஜய் பிரதீப். இவர் பல ஆண்டு காலமாக பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கி ஆட் கிளப் (Ad Club) விருதைப் பெற்றவர். தமிழக அரசின் வீராணம் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மீஞ்சூரில் செயல் படுத்தப்பட்ட கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம் ஆகியனவற்றை ஆவணப்படுத்தியவர். இவர், திரைப்படக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் நடிகை ஓமனா எம்ஜிஆருடன் ‘ஜெனோவா’ என்ற மலையாளப் படத்தில் ஜோடியாக நடித்தவர். மேலும் இவர், புதிய பறவை, திருவிளையாடல், தில்லானா மோனாம்பாள், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி தமிழில் ஒளிப்பதிவிற்க்காக முதல் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவு மேதை கே.எஸ்.பிரச்சாத்துடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். தனது குரு கே.எஸ்.பிரச்சாத்தின் வழியில் பணியாற்றிப் பெற்ற அனுபவங்களை இந்த வெப் ஃபிலிம் சீரிஸுக்கு மூலதனமாகப் படைத்துள்ளார். 1979களில் இருந்தே பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தள்ளிக்கொண்டே வந்தன. வையத்துள் வாழ்வாங்கு வாழும்படி வாழ்த்தும்போது சிரஞ்சீவி என்ற ஆசிச் சொல்லைச் சேர்த்து வாழ்த்துவதுண்டு. அதுபோல், பொன்னியின் செல்வனின் கதை எல்லா காலகட்டத்திலும் எல்லோராலும் கொண்டாடப்படும் கதை என்பதாலும் அறிவித்த நாள் முதல் ஒளிபரப்பாகும் வரை வெற்றிகரமாக நகர வேண்டும் என்பதாலும் சித்தர்களின் வழிகாட்டுதலின்படி இயக்குநர் அஜய் பிரதீப் இந்த புதிய வெப் ஃபிலிம் சீரிஸுக்கு ’சிரஞ்சீவி என்ற பெயரை இணைத்து- ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
50 ஆண்டுகாலமாக எம்ஜிஆரின் கனவை கருவாக்கி அஜய் பிரதீப் கடந்த 6 ஆண்டுகளாக இந்தக் கருவை வெளிக் கொண்டுவர கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தின் முழுத் திரைக்கதையும், வசனம், லொக்கேஷன், ஷாட் டிவிஷன் உள்பட அனைத்துத் தொழில்நுட்பக் கூறுகள் புத்தக வடிவில் பதிவாக்கப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரின் கனவை நனவாக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இயக்குநர் அஜய் பிரதீப் கூறும்போது,
“திரைக்கதை, வசனம், ஓவியங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் என முழு நிறைவு உருவாக்கங்களுடன் இசைஞானி இளையராஜாவை சந்தித்தேன். அத்தனை மெனிக்கடல்களையும் கண்ட இளையராஜா, உடனே இந்த வெப் ஃபிலிம் சீரிஸுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே ஒரு முன்னணி இயக்குநருடன் கைகோத்து பிரபல நடிகரைக் கதாநாயகானகக் கொண்டு எம்ஜிஆர் பிக்சரஸ் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாக திட்டமிடப்பட்டபோது இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. அந்தக் கனவு நனவாகாத நிலையில், மீண்டும் இளையராஜா சிரஞ்சீவி பொன்னியின் செல்வன் வெப் ஃபிலிம் சீரிஸுக்கு ஒப்புக் கொள்ள எங்கள் குழுவின் ஆறு ஆண்டுகால உழைப்பே அடிப் படையாக இருந்தது” என்றார்.
அக்டோபர் 26, 2020 அன்று ராஜ ராஜ சோழரின் பிறந்த நட்சத்திரமும் ஜென்ம நட்சத்திரமான சதய நட்சத்திரமும் விஜய தசமியும் சங்கமித்த நன்னாளில் இந்த வெப் ஃபிலிம் சீரிஸுக்கு அலுவலக பூஜை செய்யப்பட்டது. என பல மொழிகளில், அனைத்து முன்னணி நடிகர்கள் பங்கேற்க ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குநராகப் பணியாற்ற விருக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்யவிருக்கிறார். விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஓவியங்களை பாகுபலி புகழ் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மணியன் செல்வம் உடைகள் வடிவமைப்பு மேற்கொள்கின்றனர். ஒவியங்கள்-ஷன்முகவேல் ஏற்கெனவே சிஜி, ஓவியங்கள் எனப் பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று 14ல் (ஏப்ரல் 14 2021ல்) வெளியாகிறது. தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2 அன்று இசையமைப்பு தொடங்குகிறது. ஆகஸ்ட் 18ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 (ஏப்.14 2022) முதல் பிரபல ஓடிடி தளத்தில் 9 சீசனாக வெப் ஃபிலிம் சீரிஸாக முதல் எபிசோட் ஒளிபரப்பாகவிருக்கிறது. மக்கள் தொடர்பு: நிகில்.