தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பாலார்பட்டியில் 15.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் மாட்டு வண்டியில் வருகை புரிந்து விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்த வேளாண் சார்ந்த மாவட்டமாகும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பசுமையான காடுகளை கொண்ட மலை வளம் நிறைந்த பகுதி. வருசநாடு மேகமலை சுருளிமலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நீர் வைரவனாறு கூத்தனாட்சி வாய்க்கால் வறட்டாறு மற்றும் எண்ணற்ற ஓடைகள் மற்றும் கண்மாய்கள் குளங்கள் என நீர் வளம் நிறைந்த பகுதிகளாகும். தென்மேற்குப் பருவக்காற்றும் வட கிழக்குப் பருவக்காற்றும் வளம் கொழிக்கச் செய்கின்ற மாவட்டமாகும். தேனி மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படையாக உள்ள முல்லைப் பெரியாறு அணை நீரினைக் கொண்ட மாவட்டமாகும்.

மேலும் தேனி மாவட்டத்தில் வைகை அணை சோத்துப்பாறை அணை கும்பக்கரை அருவி சுருளி அருவி மேகமலை டாப்ஸ்டேசன் கொழுக்கு மலை அகமலை கர்னல் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபம் அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில் மாவூற்று ஸ்ரீவேலப்பர் திருக்கோயில் தேவதானப்பட்டி மூங்கிலணை ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில் குச்சனூர் சுயம்பு சனீஸ்ரன் திருக்கோயில் மங்கள தேவி ஸ்ரீ கண்ணகி திருக்கோயில் தீர்த்ததொட்டி ஸ்ரீமுருகன் திருக்கோயில் திருகாளாத்தீஸ்வரர் ஞானம்பிகை திருக்கோயில் உள்ளீட்ட எண்ணற்ற சுற்றுலாத்தளங்களை கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை புரிந்து சுற்றுலா தளங்களை பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்; சாரல் விழா கோடை விழா போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தின் பெருமையை பறை சாற்றும் வகையிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பராம்பாpயத்தை மேம்படுத்திடும் வகையிலும் சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பொங்கல் விழா ஆண்டுதோறும் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டில் பாலார்பட்டி கிராமத்தில் சுற்றுலா பொங்கலை கொண்டாடும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாலார்பட்டி கிராம மக்களுடன் கலந்து கொண்டு சுற்றுலா பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார். இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சரை கரகாட்டம் ஓயிலாட்டம் பொய்க்கால் குதிரையாட்டம் சிலம்பாட்டம் தப்பாட்டம் உள்ளிட்டவைகளுடன் கிராம மக்கள் கும்பம் ஏந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாட்டுவண்டியில் கிராம மக்களுடன் இணைந்து பயணம் செய்து அவர்களுடன் பொங்கல் வைத்து சுற்றுலாத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களுடன் பார்வையிட்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சுற்றுலா பொங்கல் விழா அப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி உதவி சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.