விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன்

சென்றாண்டு (2020) – நிவர் மற்றும் புரேவி புயல்களின் பேரிடராலும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் உட்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் பயிர்கள் நட்ட நிலையில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா பயிர்கள் விளைந்து, முதிரும் பருவத்தில் தொடர் மழை காரணமாக நெல்மணிகள் அவிந்து சேதமடைந்து விட்டன. விளைந்த கதிர்கள் தொடர் மழையால் முளைப்புவிட்டு சேதமடைந்துள்ளன. இதேபோல் நிலக்கடலை, உளுந்து போன்ற எண்ணெய் வித்து மற்றும் பருப்புவகை பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சேதாரங்கள் குறித்து கிராம நிலையில் இன்னும் முறையான கணக்கெடுக்காத நிலையில் ஒரு உத்தேச மதிப்பீட்டில் நிவாரணம் அறிவித்திருப்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளை மேலும் வஞ்சிப்பதாகும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒரு மனதாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக அறிவித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. சேதாரத்தை ஈடுகட்டி விவசாயிகள் மறுவாழ்வு தொடங்க தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் விவசாயிகள் சேதாரத்தை முறையாகக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் கூறியுள்ளார்.