சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், சுற்றுக் காவல் ரோந்து மற்றும் தரை ரோந்து மூலம் தீவிர கண்காணிக்கவும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு,
குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ரோந்து பணியிலிருந்தபோது, 17.01.2021 அன்று அதிகாலை, அயனாவரம், மேடவாக்கம் டேங்க் சாலை சந்திப்பு அருகே அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் அவரை சோதனை செய்தபோது, 6 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபர் கலைமணி, வ/24, த/பெ.திருநாவுக்கரசு, 29வது தெரு, முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகர், எம்.கே.பி.நகர், சென்னை என்பதும், அயனாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் திருடியதும் ஒப்புக் கொண்டார். அதன்பேரில், எதிரி கலைமணி, கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் எதிரி கலைமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.