சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு குறித்து ஆய்வு செய்து வருகிறார். புற்றுநோய் கட்டிகளில் உருவாகும் இரத்த நாளங்கள்தான், உடலின் மற்ற திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதுதான் மருத்துவத்தில் ஆஞ்சியோஜெனிசிஸ் என அழைக்கப்படுகிறது. புற்றுநோய் கட்டிகளில் ஆஞ்சியோஜெனிசிஸ் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த நைட்ரிக் ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இவர் ஏற்கனவே கண்டறிந்துள்ளார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டம் மூலம் டாக்டர் விமல் ராஜ் மற்றும் அவரது குழுவினர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை உருவாக்கி, அதன் மூலம், புற்றுநோய் கட்டிகளில் ஈடுசெய்யும் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பொறிமுறை குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.