பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன்

ஆளும் மாநில அரசு சார்பில் உடனடியாக கவர்னரை சந்தித்து இந்த விடயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கும் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அம்முடிவு இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கே உள்ளது என்று தப்பிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், மாநில உரிமைகளுக்கு எதிரான மற்றும் தமிழர் விரோத தொடர் நடவடிக்கை என, தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவிக்கும் பேரறிவாளனுக்கு இப்போது வயது 49. கடந்த 30 வருடங்களாக அவர் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்.

கொலை சதியில் தொடர்பற்ற நிபராதி; அவர் விடுதலை .செய்யப்பட வேண்டியவர் என்று, ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு, பகிரங்கமாக இந்த கருத்தை மக்கள் மன்றத்திலும், ஒரு அபிடவிட் வாயிலாக உச்ச நீதிமன்றத்திலும் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் ராஜீவ்காந்தியின் மகனுமாகிய ராகுல்காந்தியும், பேரறிவாளனை விடுவிப்பதை எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் நீதியரசர்கள் என பல தரப்பிலும் பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பேரறிவாளனின் தாயாரும் மகனை மீட்க சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். சிறையில் பேரறிவாளன் 30 ஆண்டு காலமாக கடும் தண்டனை அனுபவித்து விட்டார். அவரது உடல்நலம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் மத்திய அரசு கருத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. காரணம், தமிழ் என்றாலும் தமிழர்கள் என்றாலும் மத்திய மோடி அரசுக்கு எப்போதுமே எட்டிக்காய் தான்..

இந்நிலையில், பேரறிவாளன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கே உள்ளது என்று சொத்தையான ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார். இப்பிரசிலையில் தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி, பேரறிவாளன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை வழங்கியுள்ளது. இதன் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் கண்ணமூச்சி ஆட்டம் ஆடி வருகிறார். முதலில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது என் ஒரு காரணத்தை சொன்னார். 2019-ல் அவ்வழக்கு முகாந்திரமில்லாத வழக்கு என தள்ளுபடி செய்யப்பட்டது. அப்பொழுது முடிவெடுத்திருக்க வேண்டிய ஆளுநர், பிறகு MDMA விசாரணை இறுதி முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு பொருத்தமில்லாத காரணத்தை கூறி நாடகமாடியபொழுது, MDMA-விற்கும் பேரறிவாளன் வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நவ 2020-ல், அறிக்கை தாக்கல் செய்து நாடகத்தை முடித்து வைத்தது மத்திய CBI. அதன்பிறகாவது ஒரு நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டிய ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக மீண்டும் காலம் கடத்தினார். அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் பேரறிவாளனை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது என்பது, தெள்ளதெளிவாக உச்சநீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில அரசின் உரிமையின் அடிப்படையிலேயே தமிழக அரசு, இவர்களை விடுவிக்கும் கோப்புகளையும், காரணங்களையும் ஆளுநரின் கையொப்பத்திற்கு அனுப்பி வைத்தது. ஆளுநரின் தேவையற்ற காலதாமதம், மத்திய அரசு பேரறிவாளன் விடுதலை வழக்கில் தலையிட்டு, இதில் ஆளுநருக்கு உரிமை இல்லை, குடியரசு தலைவருக்கே உரிமை என்ற ஒரு செத்துபோன வாதத்தை முன்வைக்க வழிவகுத்தது. இந்நிலையில் நீதிமன்றமே ஒரு முடிவெடுக்கும் என யூகித்த ஆளுநர் மத்திய அரசு வழக்கறிஞர் மூலமாக நான்கு நாட்களில் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார்.

இனியாவது அரசியல் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மதித்து நடக்க வேண்டும் என தமிழக மக்களும், அவர்களது சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியும் எதிர்பார்க்கின்றது. அதே போல், அரசியல் சாசனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவைக்கு உள்ள இறையாண்மை அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநிலத்தை ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசுக்கு உள்ளது என்பதை மிக சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.
தனது பொறுப்பை மாநில அ.இ.அ.தி.மு.க அரசு தட்டிக்கழிக்குமானால் அதன் விளைவுகளை நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் சுட்டிக்காட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி கடமைப்பட்டுள்ளது.