இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமட மீனவர் மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த மீனவர்கள் நாகராஜ், செந்தில் குமார், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் சாம்சான்கேர்வின் ஆகிய நான்கு பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகில் தங்களது கப்பலைக் கொண்டு இடித்து படகைச் சேதப்படுத்தியதால் அப்படகு சிதைந்து நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மீனவர்களின் உடற்கூறு ஆய்வு இலங்கை யில் நடத்தாமல் நமது நாட்டில் நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்த நான்கு மீனவர்களின் உடல்களின் படங்களைப் பார்க்கும் போது அவர்களை உடல்ரீதியாகப் பலமாகத் தாக்கி இரத்த காயத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருந்தால் ரத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது தமிழகக் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் எல்லையை மீறினார்கள் என்றால் அவர்களைக் கைது செய்வதைத் தவிர்த்து அவர்களைத் தாக்கி அவர்களின் படகைச் சிதைத்து மீனவர்களைக் கொலை செய்திருப்பது மிகவும் மோசமான செயலாகும். இலங்கை கடற்படையின் இதுபோன்ற அராஜக செயல்களைத் தடுத்துநிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.