விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறை வேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி யில் “டெல்லி சலோ” அழைப்பை ஏற்று, தலைநகர் டெல்லி சென்ற விவசாயிகளை மத்திய அரசின் காவல்துறையினர் வழி மறித்து தடுத்து, நிறுத்தியதால், டெல்லி நகர எல்லைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து, அமைதி வழிப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று (26.01.2021) குடியரசு தின டிராக்டர் அணி வகுப்பு நடைபெறும் என விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்திருந்தது. விவசாயிகளின் குடியரசு தின அணி வகுப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் விவசாயிகள் திட்டமிட்டபடி அரசின் அதிகாரப்பூர்வ அணிவகுப்பு முடிவடைந்ததும், விவசாயிகள் குடியரசு தின அணி வகுப்பைத் தொடங்கினர். இந்த அணி வகுப்பு அமைதியாக நடைபெற விடாமல் டெல்லி காவல்துறை விவசாயிகளையும், அவர்களது வாகனங்களையும் தடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளது. தடியடி நடத்தியுள்ளது. கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. 25.01.2021 அன்று நாட்டு மக்களுக்கு உரையற்றிய குடியரசுத் தலைவர் “நாடு விவசாயிகளுக்கு பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். ஆனால் மோடியின் பாஜக மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வுரிமையினைப் பறித்து, போராடும் ஜனநாயக உரிமையை மறுத்து காட்டுமிராட்டித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கும் முறையிலும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைநிலைக் குழுக்கள், கிளைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. என்று இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்