M-6 மணலி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.B.தனசேகரன் மற்றும் வாகனஓட்டுனர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.T.கிருஷ்ணராஜா ஆகிய இருவரும் 21.08.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.00 மணியளவில் (22.8.2019) மணலி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட SRF சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த TN05 BU 0092 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தபோது, ஆட்டோவில் வந்த 4 நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின்பேரில், ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் கத்தி இருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் மேற்படி நான்கு நபர்களும் சிறிது நேரத்திற்கு முன்பு M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசப்பூர் சந்திப்பில் பஞ்சர் கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின், வ/19, த/பெ.குழந்தைவேல் என்பவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் ஆட்டோவில் வந்த 4 நபர்களையும் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு ஆட்டோவில் தப்பி வந்த 1.மணிகண்டன்,வ/19, த/பெ.கந்தன், எண்.35 காந்திநகர் 5வது தெரு, செங்குன்றம், 2. ராஜசேகர், வ/23), த/பெ.பிரபு, எண்.9, காந்தி நகர் 5 வது தெரு செங்குன்றம், 3.பழனி, வ/26, த/பெ.ராமதாஸ், எண்.26 அப்பா ராஜ் 6வது குறுக்கு தெரு லட்சுமி நகர், பல்ஜிபாளையம், மணலி, 4.வடிவேல் (32), த/பெ.வெள்ளையன், எண். 62, அறிஞர் அண்ணா தெரு, சின்ன மாத்துர் சாலை, மணலி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி-1, அகஸ்டினின் செல்போன் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மேற்படி ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு செல்போன் பறிப்பு குற்றவாளிகளை கைது செய்த M-6 மணலி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.B.தனசேகரன் மற்றும் வாகனஓட்டுனர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.T.கிருஷ்ணராஜா ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 23.8.2019 நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.