இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப்படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் – வேல்முருகன் ஆவேசம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதிமுக அமைச்சரவையால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலட்சியம் காட்டினார். பேறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்றம், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஏழு பேரின் விடுதலை குறித்து, ஆளுநர் ஒரு வாரத்தில் முடி வெடுப்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தான் முடிவெடுக்க முடியாது என்றும் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக, ஜனவரி 25 ஆம் தேதி குறிப்பிட்ட ஆளுநர் பன்வாரில் புரோகித் அவர்களின் கடிதம், நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், ஏழு பேரையும் தான் விடுதலை செய்ய முடியாது என ஜனவரி 25ஆம் தேதியே, ஆளுநர் சொல்லாமல் சொல்லிவிட்டார். அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163 (1)இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள முடியாது. நீதிமன்றமே ஆளுநர் முடிவு என்ற கூறிய பிறகு, ஏழு தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது ஜனநாய கத்திற்கு எதிரானது. சட்ட விரோதமானது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை அவமானப் படுத்தும் செயல். பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர்.

ஜனவரி 29 ஆம் தேதி, ஆளுநரை சந்தித்து ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் உரையாற்றியிருந்தார். இது தமிழர்களை ஏமாற்றும் வார்த்தை என்பது இப்போது அம்பலப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது கருத்தை கடித்தத்தின் வாயிலாக, 25 ஆம் தேதியே மத்திய அரசுக்கு அனுப்பி விட்டார். அதற்கு பின்னர், ஆளுநரை சந்தித்து ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, பொய் என்பதும், தனது பதவியை தக்க வைப்பதற்காகவே ஆளுநரை சந்தித்துள்ளார் என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது. ஏனென்றால், பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கில், அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று அதிமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு, ஆளுநர், அதிமுக அரசும் சேர்ந்து, நாடகமாடி வருவது வெளிப்படையாக தெரிகிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏழு பேரை விடுதலை செய்ய மத்திய பாஜக அரசுக்கு எண்ணமில்லை என்பதை தான், ஆளுநரும், எடப்பாடி பழனிசாமியும் செயல்படுத்தி வருகின்றனர் என்பதையும் நாம் புரிந்து கொள் வேண்டும். எனவே, பாஜக அரசின் தமிழின விரோதப்போக்கிற்கு துணை போகாமல், கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.