சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன்

முதுகலைப் பட்டப்படிப்பில் உயிரி தொழில் நுட்பக் கல்வி பயிலும் எம்.டெக் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் ஆகிய ஐந்து பல்கலைக் கழகங்களிலும் அகில இந்திய நுழைவு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில் பாஜக மத்திய அரசு மண்டல உயிரி தொழில்நுட்பத் துறையின்கீழ் நடைபெறும் நிகிஜி ஙி தேர்வு மதிப்பெண் அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. இதற்கு அந்தந்தக் கல்வி நிறுவனங்களே தேர்வு விதிமுறைகள் வகுத்துக் கொள்ள அனுமதித்து, மத்திய இடஒதுக்கீடான 49.5 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே அமலாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் மாணவர்களின் மானியக் குழுவின் மாத கல்வி உதவித் தொகையை வழங்க முடியாது என மிரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் 69 சதவீத இட ஒதுக் கீட்டு முறையை மத்திய அரசு வஞ்சகமாக பறித்திருக்கிறது. மேலும் மத்திய அரசின் அறிவிப்புப் படி “பொருளதார அடிப்படையில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான” 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடந்தியுள்ளது.

மத்திய அரசின் அதிகார அத்துமீறல் குறித்து மாநில அரசும், முதலமைச்சரும் துளியும் கவலைப் படவில்லை என்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழங்களின் வேந்தர், ஆளுநர் என்கிற முறையில் ஆளுநர் அலுவலகம் மூலமாக மத்திய அரசு உயர்கல்வித் துறை யில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகின்றது. இதனால் உயிரி தொழில்நுட்பத் துறையில் முதுகலை பயில விரும்பும் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமை, தமிழக அரசின் சமூக நீதி, மாணவர் நலன் என அனைத்தும் ஒரு சேர பாதிக்கப்பட்டிருப்பதன் மீது தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் போர்க்கால வேகத்துடன் தலையிட்டு, நடப்பாண்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையில் உயிரித் தொழில் நுட்பம் பயிலும் முதுகலை பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற உடனடியாக உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.