தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி மக்களவையில் விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடரந்து வருகிறது. நாட்டில் பொதுத்துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்குக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார் துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக தொலைத்தொடர்புத் துறையிலும், மருந்துத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்கின்றன. ஏழை மக்கள் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்து கிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும் போட்டி காரணமாக மக்கள்எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவி களை பல நாடுகளுக்கும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு தனியார் துறை, தனியார் நிறு வனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது. ஆதலால், தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த காலம் கடந்துவிட்டது. தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது.

அதேபோல அந்தோலங்காரி (போராட்டக்காரர்) அந்தோலன்ஜீவி (ஒரு போராட்டத்திலிருந்து மற்றொன்றுக்கு தாவுபவர்) ஆகியவற்றுக்கும் அர்த்தம் தெரிய வேண்டும். நான் விவசாயிகளின் போராட்டத்தை மதிக்கிறேன். அவர்களின் போராட்டம் பவித்ரமானது (சுத்தமானது). ஆனால், அந்தோலங்ஜீவிஸ் அதாவது ஒரு போராட்டத்திலிருந்து மற்றொரு போராட்டத்துக்கு தனது ஆதாயத்துக்காக செல்பவர்கள், விவசாயிகளின் போராட்டத்தை தங்களுக்காகப் பயன்படுத்து கிறார்கள். இதனால்தான் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். சாலையில் சுங்கச்சாவடிகளை செயல்படுத்த அனுமதிக்காமல், தொலைத்தொடர்பு கோபுரங்களை அழிப்பவர்கள் எவ்வாறு தூய போராட்டக்காரர்களாக இருக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.