மழைக் காலங்களில் பெருக்கெடுத்து கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை வறட்சி மாவட்டங் கள் பயன்படுத்தும் வகையில் ஆறுகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராடி வந்துள்ளது. மற்ற சங்கங்களும், விவசாயிகளும் போராடி வந்துள்ளனர். இந்த நிலையில் காவிரி & தெற்கு வெள்ளாறு & வைகை & குண்டாறு களை இணைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இதற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலியும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்துக்காகவும் காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகம் மற்றும் இதர மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். இதை தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கை எடுப்போம் என்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த கர்நாடக முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் கூறுகிறார். இவை ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதில் தமிழ்நாடு மிகப் பெரும் நெருக்கடியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. காவிரி பிரச்சினையில் கர்நாடகம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. பலவகையான நிர்பந்தங்களுக்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அம் மன்றம் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதை கர்நாடகம் ஏற்க முடியாது என்று பிடிவாதம் செய்தது. அதன்பிறகு 192 டி.எம்.சி. வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதையும் ஏற்காமல் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. இச் சூழலில் 177.25 டிஎம்சி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படியும் கர்நாடகம் தண்ணீர் வழங்குவதில்லை. இவை போன்ற மனித மாண்புகளை புறம்தள்ளி சர்வாதிகார நிலையில் கர்நாடகம் செயல்படுவது நல்லதல்ல. மேலும், இந்திய கூட்டாண்மை ஆட்சி முறைக்கும் விரோதமான செயலாகும்-. ஆகவே கர்நாடகம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு நதிகளை இணைப்பதில் தயக்கம் காட்டாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.