தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே 27.2.2021 அன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ் நாட்டில் 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான உடன்படிக்கையில் கையொப்பம் இடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தேர்தல் உடன்படிக்கையின் போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர்.வைத்தி லிங்கம், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான தங்கமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலா ளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான வேலுமணி ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் மு. பாலு, புதுவை மாநில அமைப்பாளர் கோ. தன்ராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களும் உடனிருந்தனர்.