நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெளியிட்ட தமிழகத்தின் விடியலுக்கான ஏழு உறுதி மொழிகள் கொண்ட தொலைநோக்கு திட்ட அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் அறிவிக்காத அற்புதமான உறுதிமொழிகளாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம், அனைவருக் கும் தண்ணீர், உயர்தர கல்வி, மகத்தான மருத்துவம், மாநகரங்களை மெருகூட்டல், உயர்ந்த ஊரக கட்டமைப்பு, உயர்வான வாழ்க்கைத் தரம் இந்த ஏழு அம்சங்கள் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் மறுமலர்ச்சி, ஏற்றத்தாழ்வில்லா வாழ்க்கைத் தரம், பொருளாதார தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை குறிக் கோளாகக் கொண்டு அறிவித்திருப்பது இந்த திட்ட அறிக்கையின் மற்றொரு சிறப்பம்சமாகும். குறிப்பாக, குடும்பத் தலைவிகள் அனைவருக் கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோன்று மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து இயந்திரங்கள் மூலம் அவற்றை அகற்றுதல் என்ற முன்மாதிரியான அறிவிப்பு இத்தொழில் செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமல்ல, இந்த இழிவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அனைவரின் இதயங்களையும் குதூகலப்படுத்தியுள்ளது.
பசுமை பரப்பளவை 25 விழுக்காடாக உயர்த்தப்படும் என்பதும், பள்ளிக் கல்வியில் இடை நிற்றலை 5 விழுக்காடாக குறைக்கப்படும் என்பதும், தமிழக மக்களுக்கு வளம் சேர்க்கும் அறிவிப்புகளாகும். மேலும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகைகளை மத்திய பாஜக அரசு மறுத்துள்ள நிலையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்பதும் வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும். இந்த திட்டங்களானது அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் என்றும், தமிழகம் உண்மையான ஒரு விடியலை அனுபவிக்கும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி கருதுவதுடன், இத்தகைய முற்போக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட அறிவிப்புகளை அறிவித்த திமுக தலைவர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.