1. இராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற குற்றவாளி கைது: திருவல்லிக்கேணி, ரோட்டரி நகர் 3வது தெரு, எண்.27 என்ற முகவரியில் ஆதிலஷ்மி, பெ/வ.75 என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் பூலோகம் என்ற பெண்மணி தினமும் ஆதிலஷ்மிக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். கடந்த, 04.3.2021 அன்று காலை பூலோகம் ஆதிலஷ்மியின் வீட்டிற்கு உணவு கொடுக்க சென்றபோது, அங்கு ஆதிலக்ஷ்மி இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தத தின்பேரில், E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்தபோது, ஆதிலஷ்மி கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் விலகிய நிலையிலும், பீரோவில் இருந்த துணிகள் கலைந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் தங்க மூக்குத்தி திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து E-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆதாயக் கொலை பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின்பேரில், மயிலாப்பூர் துணை ஆணையாளர் சஷாங் சாய், மேற்பாவையில், E-2 இராயப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜிவிஜயலஷ்மி, தலைமைக் காவலர் சிவபாண்டியன் (த.கா.26980), முதல்நிலைக் காவலர் அருண்பாண்டியன் (மு.நி.கா. 44730) மற்றும் காவலர் புவனேசன் (கா.50863) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் விஜயலஷ்மி தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளியின் அடையாளங்களை கொண்டு, அப்பகுதியில் தீவிர விசாரணை செய்தும், தீவிர தேடுதலில் ஈடுபட்டு, கலங்கரை விளக்கம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் மறைந்திருந்த மேற்படி ஆதாயக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளி வசந்த் (எ) மினி பாட்ஷா, வ/23, த/பெ.ராஜா, கலங்கரை விளக்கம் ரயில் நிலையம், பிளாட்பாரம், திருவல்லிக்கேணி, சென்னை என்பவரை அன்றைய தினம் (04.3.2021) கைது செய்தனர். அவரிடமிருந்து, பணம்
ரூ.700/- பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், குற்றவாளி வசந்த், 04.03.2021 அன்று அதிகாலை சுமார் 01.00 மணியளவில் ஆதிலஷ்மி விட்டிற்குள் நுழைந்தபோது, அவர் தனியாக இருந்ததை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தும், அவரை தாக்கி கொலை செய்தும், பணம் மற்றும் தங்க மூக்குத்தி ஆகியவற்றை திருடிச் சென்றது ஒப்புக்கொண்டார். மேலும், விசாரணையில் குற்றவாளி மீது B-2 எஸ்பிளனேடு, N-2 காசிமேடு மற்றும் C-1 பூக்கடை ஆகிய காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரியவந்தது. காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, புகார் கிடைத்த சுமார் 5 மணி நேரத்தில் மேற்படி குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
2. ஆர்.கே.நகர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 நபர்கள் கைது: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பில் இருந்த தலைமைக் காவலர் கே.ராமு (த.கா.24952), காவலர் பரித்ராஜா, (கா.52527), ஆயுதப்படை காவலர்/ஓட்டுநர் ஜி.உதயன் (கா.44112) மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் (HG 5360) ஆகியோர் 08.3.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.00 மணியளவில் (09.3.2021) கொருக்குப்பேட்டை, இரயில்வே கேட் அருகே கண்காணிப்பு பணியிலிருந்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், 4 நபர்களை பிடித்து, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத் ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில்,பிடிபட்ட நபர்கள் நாகூர் உசேன், சரவணன், உதயகுமார் மற்றும் பார்த்திபன் என்பதும், கடந்த 04.03.21 அன்று H-6 ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக ராஜாமுகமது, வ/26, த/பெ.சையதுபுகாரி என்பவர் உட்பட 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேற்படி குற்றவாளிகள் பிடிபட்டதற்கும், காவல்துறைக்கு தகவல் கொடுத்ததும், அதே பகுதியில் நேதாஜிநகர் 5வது
தெருவில் வசித்து வரும் பெரோஸ்கான், வ/40 என்பவர்தான் காரணம் எனக் கருதி, குற்றவாளி ராஜா முகமதுவின் நண்பரான மேற்படி நாகூர் உசேன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பெரோஸ்கானை கொலை செய்ய கத்தியுடன் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகள் 1.நாகூர் உசேன், வ/31, த/பெ.அல்லா பிச்சை, எண்.103, நேதாஜி நகர் 4வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை, 2.சரவணன், வ/29, த/பெ.வெங்கடேசன், எண்.133, ஜெயலட்சுமி நகர், மீஞ்சூர், சென்னை, 3.உதயக்குமார், வ/31, த/பெ.ஜெயபாண்டியன், தெலுங்கு செட்டித்தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, 4.பார்த்திபன், வ/30, த/பெ.ஆறுமுகம், பாண்டிச்சேரி முருகேசன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி நாகூர் உசேன் மீது கும்மிடிபூண்டி, சிப்காட் காவல் நிலையத்தில் 3 நபர்களை கொலை செய்த வழக்கு உள்ளது தெரியவந்தது.
3. மாதவரத்தில் இரவு ரோந்து பணியின்போது, வீடு புகுந்து திருடிய குற்றவாளி கைது: 4.63 லட்சம் பணம், 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் மீட்பு M-1 மாதவரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஶ்ரீதர் (த.கா.26753) மற்றும் முதல்நிலைக் காவலர் சுரேஷ் (மு.நி.கா.29938) ஆகியோர் கடந்த07.3.2021 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 08.3.2021 அன்று அதிகாலை சுமார் 04.00 மணியளவில் மாதவரம், சந்திரபாபு காலனி, ராதாகிருஷ்ணன் ஹாஸ்டல் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருட்டான பகுதியில் மறைந்திருந்த ஒரு நபர் காவலர்களை கண்டதும், அவர் வைத்திருந்த பையை போட்டுவிட்டு ஓடினார். உடனே, காவலர்கள் ஶ்ரீதர் மற்றும் சுரேஷ் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து, அவர் விட்டுச் சென்ற பையை பார்த்தபோது, அதில் பெருமளவு பணம் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், பிடிபட்ட நபரை M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சுதாகர், வ/24, த/பெ.வெங்கடேசன், எண்.358, ஒத்தவாடை பெரியார் தெரு, ஆற்காடு, வேலூர் மாவட்டம் என்பதும் சற்று முன்பு, மாதவரம், பொன்னியம்மன்மேடு, தணிகாச்சலம் நகர் 5வது தெரு, எண்.64 என்ற முகவரியிலுள்ள ப்ளேவியன் டிக்ரூஸ் என்பவரது வீட்டில் மேற்படி பணம் மற்றும் செல்போன்கள் திருடியதும் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரி சுதாகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பணம் ரூ.4,63,000/-, 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் எதிரி சுதாகர் மீது செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தும், குற்றவாளிக்கு நீதிமன்ற தண்டனை பெற்று தந்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 10.3.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.