பெரு முதலாளிகளின் தனியார் வங்கிகளை ஊக்கப்படுத்தி, முதன்மை நிலைக்குக் கொண்டு வருவதற்காக, சிறப்பாகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு மிகுந்த முனைப்புடன் சீர்குலைத்து வருகிறது. ஏற்கனவே ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்று தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. 14 பொதுத்துறை வங்கிகளை இணைத்ததன் மூலம் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப் போவதாக மத்திய அரசு கூறுகிறது. இதுவரையில் வரி வசூல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட அரசுத் துறைகளின் பணப் பரிவர்த்தனை பொதுத்துறை வங்கிகள் மூலமே நடைபெற்று வந்தது. தற்போது மத்திய அரசு தனியார் வங்கிகளையும் இதில் அனுமதித்துள்ளது. சமவாய்ப்பு வழங்குவதாக நியாயம் பேசுகிறது. ஆனால் மத்திய அரசு பெருமையடித்துக் கொள்ளும் ஜன்தன் வங்கி கணக்குகளை 12 கோடிப் பேருக்கு திறந்தது பொதுத்துறை வங்கிகள்தான். தனியார் வங்கிகள் ஒரு கோடிப் பேருக்கே வழங்கின. விவசாயக் கடன், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகியவற்றை பொதுத்துறை வங்கிகள் தான் வழங்குகின்றன. கிராமங்களில் வங்கிக் கிளைகள் திறந்திருப்பதும் பொதுத்துறை வங்கிகளே. இவையனைத்தும் தனியார் மயப்படுத்தினால் அழிந்து போகும். நம்பிக்கையோடு பொதுத்துறை வங்கிகளில் சாதாரண மக்கள் வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மாற்றுவதே தனியார்மயமாகும். இவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். தமது நலன்களை முன்னிறுத்தாமல் மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காப்பதற்காக வேலை நிறுத்தம் செய்யும் வங்கி ஊழியர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு பாராட்டுகிறது. வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற வாழ்த்துக் களைத் தெரிவிக்கிறது. பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தும் முடிவைக் கை விடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.