50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்று போர்க்குரல் பாடியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய மகன் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு தொண்டனாக 14 வயதில் கோபாலபுரத்தில் என்னை இணைத்துக் கொண்டு, அங்கே இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் இளைஞரணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த வட்டத்தில் பகுதி பிரதிநிதியாக, சென்னை மாவட்ட பிரதிநிதியாக, கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, துணைப் பொதுச் செயலாளராக, கழகப் பொருளாளராக, தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இந்த இயக்கத்தின் செயல் தலைவராக, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனாக பொறுப்பேற்று பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
5 முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்காக எத்தனையோ அற்புதமான திட்டங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றி தந்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை சூட்டி, அவர்களுக்கு ஒரு நலவாரியம் ஏற்படுத்திக் கொடுத்தார், திருநங்கைகளுக்கு நல வாரியம் உருவாக்கி தந்தார், கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’, ‘நமக்கு நாமே’ திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எல்லா மதத்தை சார்ந்தவர்களும், ஜாதி மதங்களை கடந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை உணர்வோடு ஒருமித்த கருத்தோடு மக்கள் வாழவேண்டும் என்பதற்காக ‘சமத்துவபுரம்’ திட்டத்தை தந்தை பெரியார் பெயரில் ஏற்படுத்திக் கொடுத்தார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை ஏற்படுத்தி கொடுத்தார், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு, பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் – யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு அற்புதமான திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஏழை எளிய பெண்களின் திருமண செலவிற்காக உதவித்தொகை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் – கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் உருவாக்கப்பட்டது, மினி பஸ், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவிகள் – சலுகைகள், பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலினத்தவர் அத்தனை பேருக்கும் இட ஒதுக்கீடு எண்ணிக்கை உயர்த்தப்பட்டது, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு புரட்சிகர திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு திட்டங்களை நாம் தொடர்ந்து அடுக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நேரமில்லை. ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை கவனிப்பது போல தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் கவனித்து அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கலைஞருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறேன். இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? இதுவரையில் சகோதரி அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இந்த நீட்டுக்காக சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானமே போட்டோம். இதுவரையில் அது என்ன நிலையில் இருக்கிறது? என்று மத்திய அரசிடம் – மாநில அரசு கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் கைகட்டி – வாய் பொத்தி ஓர் அடிமை ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம். நாம் எப்போதும் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது தலைவர் கலைஞர் அவர்கள், “சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம்” என்று சொல்வார். அவருடைய வழியில் வந்திருக்கும் இந்த ஸ்டாலினும், “சொன்னதைச் செய்வான், செய்வதைத் தான் சொல்வான்“. தேர்தல் அறிக்கையில், பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு. சிறப்பு தாய் – சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும். விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்கப்படும். டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைக்கப்படும். சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 குறைக்கப்படும். பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 – கரும்பு டன்னுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும். வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் உருவாக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.