கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 6,86,469 முகாம்களில் 4,20,63,392 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,06,839 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 48,04,285 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 79,57,606 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 24,17,077 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 32,23,612 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,59,53,973 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 2021 மார்ச் 18-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3,93,40,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்மூலம் அதிக தடுப்பூசிகளை வழங்கிய நாடுகளுள் இந்தியா இரண்டாம் இடம் (அமெரிக்காவை அடுத்து) பிடித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அன்றாட புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 40,953 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,681 பேரும், பஞ்சாபில் 2,470 பேரும், கேரளாவில் 1,984 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் தற்போது 2,88,394 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 2.50 சதவீதமாகும். இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,07,332 ஆக (96.12%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23,653 பேர் புதிதாகக் குணமடைந் துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19-ஆல் 188 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.