காய்ச்சல் இருந்தால் மாத்திரை போட்டுத் தள்ளிப் போடுவது, பிறகு பார்க்கலாம் என பரிசோதனையைத் தள்ளிப்போடுவது தொற்றுப் பரவலை அதிகரிக்கும். பேரிடர் மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாரிமுனையில் பரிசோதனை முகாம்களை ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
”தஞ்சாவூரில் உடனடியாகப் பள்ளிகளை மூடி நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தவிர ரேண்டமாக பொதுமக்களிடையே பரிசோதனை நடத்துகிறோம். பரிசோதனைகள் 50 ஆயிரம் என்ற சராசரியை 75 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.
பிசிஆர் பரிசோதனைகள், நோய் கண்டறியப்பட்டால் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து சோதிப்பது, நோய்த்தொற்று பகுதிகளைத் தட்டி வைத்து அடைக்காமல் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளே இருப்பவர்கள் வெளியில் போவது, வெளியில் இருப்பவர்களை உள்ளே வராமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கோவிட் சார்ந்த பழக்க வழக்கங்கள் நமக்கு வர வேண்டும். அரசியல் கூட்டங்கள் நடக்கின்றன. எதுவாக இருந்தாலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளோம். முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். காய்ச்சல் இருந்தால் அலுவலகம் போகக் கூடாது. மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். பரிசோதனை செய்யவேண்டும். தெர்மல் சோதனையில் டெம்ப்ரேச்சர் அதிகமாக இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கைகழுவ வேண்டும். கிருமி நாசினி போட வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைக் கடைப்பிடிப்பதில் சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலை உள்ளது. அதனால்தான் பரவத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் 2000 தொற்று எண்ணிக்கை, கேரளாவில் இன்றும் குறையாத நிலையில் தமிழகத்தில் 7000 லிருந்து 500க்கும் கீழே கொண்டு வந்தது மிக முக்கியமான பங்களிப்பு பொதுமக்களிடம் இருந்தது.
தற்போது தடுப்பூசி வந்துள்ளது. யார் யாருக்குத் தகுதி உள்ளதோ அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். எங்குமே ஒருவருக்கு நோய் உறுதியானால் உடனடியாக அங்கு உடன் இருப்பவர்களை, தொடர்பில் இருப்பவர்களைப் பரிசோதிக்க வேண்டும். அப்படி சோதிக்கும்போது 30 பேரை சோதித்தால் 5லிருந்து 10 பேருக்கு வரும். அவ்வாறு சோதனை செய்யும்போது 1200 இருந்ததே 1400 வருகிறதே என ஒரு அச்சம் இருக்கும். இந்த நோயைக் கட்டுப்படுத்த கடுமையான ஃபோக்கஸ் டெஸ்ட் செய்ய வேண்டும். சென்னையில் அதிக அளவிலான மொத்த தொற்று உள்ள இடங்களைக் கண்டறிந்து வருகிறோம். 12-ம் தேதி பெரம்பூரில், வானகரத்தில் இருந்தது. பெருங்குடி ஏரியா ஒன்று. சென்னையில் மடிப்பாக்கம் ஏரியாவில் அதிக பரவல் உள்ளது. ஏற்கெனவே உள்ள பகுதிகளில் தண்டையார்பேட்டை, கொடுங்கையூரில் பார்த்துள்ளோம். ஆனால், சாதாரணமாக மடிப்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர் பகுதிகளில் கூடுதலாக மொத்த தொற்றுகள் இருப்பதாகத் தெரிகிறது. காய்ச்சல் வரும்போது டோலோ மாத்திரை சாப்பிட்டு 2,3 நாட்கள் காலம் தாழ்த்தி வரும்போது சிக்கலாகி விடுகிறது. விடுமுறை நாள், பண்டிகை நாள், இரண்டு, மூன்று நாட்கள் கழித்துப் போகலாம் என்று முடிவெடுப்பதால் சிக்கலாகி விடுகிறது. முகக்கவசத்தை கழுத்தில் அணிகிறார்கள். எங்களைப் பார்த்தவுடன் எடுத்து அணிகிறார்கள், முகக்கவசத்தை முகத்தை மூடித்தான் அணிய வேண்டும். அதை 10 நாட்கள் தொடர்ந்து அணிந்தாலே தொற்று பரவாது”. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.