மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள ஊரணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ்.இ.ஆ.ப., அவர்கள் 27.08.2019 அன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்தும் வகையிலும் மழை நீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப் பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 இலட்சம் மதிப்பிலும், ஊரணிகள் தலா ரூ.1 இலட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ. 21.8 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடலாடி வட்டத்திற்குட்பட்டு பொதுப்பணித்துறையின் கீழ் சிக்கல் கண்மாயில் ரூ.69.10 இலட்சம் மதிப்பிலும், மாராந்தை கண்மாயில் ரூ.69 இலட்சம் மதிப்பிலும், முதுகுளத்தூர் வட்டத்திற்குட்பட்டு மேலப்பனையூர் கண்மாயில் ரூ.37 இலட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குளம் ஊராட்சியில் சடையனோர் ஊரணியிலும், இளஞ்சசெம்யூர் மடத்து ஊரணியிலும் ஆகிய தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களுக்கு இன்றைய தினம் 27.08.2019 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரிடையாகச் சென்று குடிமராமத்து திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் திரு.இராமமூர்த்தி, உதவி பொறியாளர் திரு.கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆனந்தக்கண்ணன், திருமதி.மேகலா, வட்டாட்சியர்கள் திரு.கல்யாணகுமார், திரு.முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.