முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினர். மேலும் தடுப்பு மருந்து தயாரிப்புக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அரசின் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கீழ்க்கண்ட கோரிக்கை விண்ணப்பத்தை முதலமைச்சரிடம் வழங்கினர்.

கோரிக்கை விண்ணப்பம்:

கொரோனா நோய்த்தொற்று பரவல் ஓராண்டிற்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நம்பிக்கையூட்டும் நடவடிக்கை
கடந்த ஆண்டில் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், தாங்கள் தொடங்கிய கொரோனா நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, தற்போது தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதல்வராக தீவிரமாக முன்னெடுத்து வருவது, குறிப்பாக தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு வழங்கும் முயற்சி பெரும் நம்பிக்கையளிக்கிறது. நோய்த்தொற்று தாக்கலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேவையான தடுப்பு மருந்துகள் கிடைக்கததால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்படுகிறது. தடுப்பு மருந்து உற்பத்தி வளாகம் இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிய அரசால் கட்டப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்துவது குறித்து பரிசீலிப்பது நல்ல பயனளிக்கும் என உறுதிபட நம்புகிறோம். கடந்த 2012 ஆம் ஆண்டில் திமுகழகம் பங்குவகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசின் திட்டத்தில் கட்டப்பட்ட, 58 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் உற்பத்தி திறன் கொண்ட, பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் பார்வையிட்ட உலக சுகாதார நிறுவனத்தில் மருத்துவ நிபுணர்கள் அது உலகத்தரத்துடன் அமைந்திருப்பதாக சான்றளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும். ஒன்றிய அரசின் செலவில் கட்டப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை தற்போதைய பாஜக அரசு தனியாருக்கு விற்று விடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான முறையில் நிபந்தனைகளை தளர்த்தி வருகிறது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு எடுத்து, மாநில அரசின் பொதுத் துறையாக ஏற்று, அதில் தடுப்பு மருத்துகள் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேற் குறிப்பிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படுத்தினால் சாதனை பட்டியலில் சிகரமாக அமையும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். இதுகுறித்து மாண்புமிகு முதல்வர், தக்க முறையில் பரிசீலித்து, உரிய முடிவுகள் எடுத்து, தடுப்பு மருத்து உற்பத்தியில் சாதனை படைக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இரா.முத்தரசன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.