முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சில இடங்களில் காவல்துறையினர் மிகவும் கெடுபிடி காட்டுவது வேதனை அளிக்கிறது. இன்று மதியம் செம்பியம் பகுதியில் ‘மக்கள் குரல்’ பத்திரிகை சர்க்குலேசன் பிரிவில் பணிபுரியும் ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
மேலும் ராயப்பேட்டை பகுதியில் ஒரு மூத்த கிரைம் பத்திரிகையாளர் ஒருவர் ஜாம்பஜாரில் கபசுர குடிநீருக்கான நாட்டு மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். அவரை ராயப்பேட்டை மார்ச்சுவரி எதிரில் வழிமறித்த ஆயுதப்படை காவலர் ஒருவர் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றிருக்கிறார். பத்திரிகையாளர் என்றதும் நாளை இ பதிவு இல்லாமல் வந்தால் வந்தால் வண்டியை பிடுங்குவேன் என அந்த காவலர் அதிகார தொனியில் மிரட்டல் விடுத்துள்ளார். பெரும்பாலான இடங்களில் பிரஸ் வாகனங்களை காவல்துறை மடக்குவதில்லை. அவர்களை மதித்து தொடர்ந்து செல்ல அனுமதியளிக்கின்றனர். ஒரு சில இடங்களில் மட்டுமே சில ஆயுதப்படை காவலர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.