ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள்.
மே 2009 சிறிலங்கா அரசின்இனவெறித் தாண்டவத்தின்உச்ச கட்டம் எனபது உலகறிந்த உண்மை. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஈழத்திலுள்ள சமூக அமைப்புகளும் மே 2009 இல் காணாமல் ஆக்கப்பட்ட 146,679 தமிழ் மக்கள் இன்றும் கணக்கிடப்படாமல் உள்ளார்கள் என வருத்தம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று அப்பாவித் தமிழ் மக்கள் இனவெறி அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ திட்டமிட்டு தள்ளப்பட்டு சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசான ஆயுதங்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப் பட்டார்கள்.
பசி என ஒரு வேளை உணராது தம் உழைப்பால் உணவருந்தி இயற்கையோடு செறிந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் உண்ண உணவின்றி இறுதியில் கஞ்சிக்கு வரிசையில் கையேந்தி நின்றார்கள். ஆனால் சர்வதேசங்கள் நடப்பவற்றை நன்கு அறிந்தும் இனப்படுகொலையை நிறுத்தத் தவறியது. தொடர்ந்தும் அதற்கான நீதியை நாம் பெற பல வழிகளில் சதிகள் செய்து நீதி மறுக்கப்படுகின்றது.
போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் 20க்கும் மேற்பட்ட பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து மதிப்பிற்குரிய Rt Hon Dominic Raab MP அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்கள்.
கோரிக்கைகள் பின்வருமாறு :
1. இன்றும் இலங்கை அரசாங்கத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் செயல்களை இனவழிப்பு என இனங்காணப்பட வேண்டும்.
2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தற்காலிக தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும்.
3. தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.
ஐக்கிய இராச்சியத் தமிழ் இளையோர்கள் ஆகிய நாம் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் எதை இழந்தோமென்றும் எதற்காக போராடுகின்றோமென்றும் உலகத்திற்கு எடுத்துக்கூறினார்கள். உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் இளையோர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலையையும், இன அழிப்பையும், அடக்குமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.
தமிழீழம் அடையும் வரை இந்த எழுச்சி தொடரும்!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”