தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டுச் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை நிரந்தரமாக மூடக்கோரி 2018ஆம் ஆண்டு அன்று மக்கள் அமைதியான வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 15பேரைக் கொலை செய்தனர். நாட்டையை இச்சம்பவம் உலுக்கியது. வரலாற்றில் பெரிய வடுவை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய தமிழக முதல்வருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படுகொலை நடந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்த காவல்துறை மற்றும் இதரதுறை அதிகாரிகள் மேல் துறை ரீதியாகவும் அரசு பெரிய அளவில் நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. அமைதியான வழியில் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையினை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை வழங்க வேண்டும் . அப்போதுதான் சட்டத்தின்மீதும், அரசின் நிர்வாகத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உருவாகும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தி.மு.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியபடி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். “ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க மாட்டோம்” என முதல்வராகப் பொறுப்பேற்பதிற்கு முன்பு தமிழக மக்களுக்குத் திரு ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புப்படி ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
வழக்கறிஞர்.
சி.சே.ராஜன்
மாநிலத்தலைவர்
சமம் குடிமக்கள் இயக்கம்.