மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநில காவல்துறையின் சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர். கமாண்டோ படையினர் வனப்பகுதிக்குள் வருவதை அறிந்த 50 பேர் கொண்ட நக்சல்கள் கும்பல் பதுங்கி இருந்து திடீரென தாக்குதல் நடத்தினர். போலீசார் பதில் தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி சுமார் இரண்டரை மணிநேரம் போலீசாரின் பதிலடி நீடித்தது. இதில் 13 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசாரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.