ஓ.என்.வி. தேசிய இலக்கிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை பாராட்டியது இ.கம்யூனிஸ்ட் கட்சி

கேரள மாநிலத்தில் பிறந்த மாபெரும் இலக்கிய ஆளுமை ஓ.என்.வி. குரூப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுக்கு இந்தாண்டு கவிப்பேரரசு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டபலக்கல் நீலகண்டன் வேலு குரூப் என்ற நீண்ட பெயர் கொண்ட மகத்தான படைப்பாளியை கேரள மக்கள் ஓ.என்.வி. குரூப் என அழைத்து வந்தனர். இலக்கிய உலகின் மகத்தான, தனித்துவமிக்க ஆளுமையான  இவரது இலக்கிய படைப்புகளும், பாடல்களும் மலையாள இலக்கியத்தின் தொன்மை மரபுகளை பற்றி நின்று, கால வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து, நெகிழ்ந்து வளரும் கூறுகளை முன்னெடுத்தவைகளாகும். மனித சமூகத்தின் சமத்துவம் வலியுறுத்தும் கொள்கை நெறிகளில் வாழ்ந்த பெருந்தகை. இவரது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்கும். இந்த பெருமைக்குரிய மாபெரும் படைப்பாளியின் பெயரில் அமைந்த தேசிய விருதை முதன்முதலாக, கேரளத்திற்கு வெளியே தமிழ் இலக்கிய உலகின் தாரகை வைரமுத்து பெறுவது மிக மிகப் பொருத்தமானது. பெருமைக்குரியது.

வைரமுத்து படைப்பான கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர், தமிழாற்றுப்படை போன்ற ஆக்கங்கள் அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறைகளும் தேடி தேடி கற்றுணரும் பாடங்களாக அமையும். இவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் தமிழர் வாழ்வில் கலந்து நிற்கும். ஓ.என்.வி. குரூப் இலக்கிய தேசிய விருது பெரும் கவிப்பேரரசு வைரமுத்து, மேலும் பல விருதுகளை வென்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் திசையில் அவரது இலக்கியப் பயணம் சிறந்து அமைந்திட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு