தி.மு.க துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா நீலகிரிக்கு வருகை தந்தார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ராசாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னூரில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்கள் மத்தியில் நன்றி தெரிவித்துக் கொண்டு ஊட்டிக்கு வருகை தந்த ராசா, ஊட்டி காஃபி ஹவுஸ் சதுக்கத்தில் தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய ராசா, “எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வைத்துவிட்டுப் போன கடனை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுதான் அடைத்திருக்கிறது. தொடர்ந்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார் முதல்வர். திராவிட மாடல் ஆட்சியை நடத்தி பிரதமர் மோடியை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். திராவிட மாடல் என்றால் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எங்களை கேட்கிறார்கள். எல்லோரையும் சமமாக நடத்துங்கள். கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அனைவருக்கும் சமமாக கிடைக்கச் செய்வதே திராவிட மாடல் என்று அவர்களுக்கு பாடம் நடத்தும் பெருமையை எங்களுக்கு உருவாக்கி கொடுத்தவர் ஸ்டாலின். நமது முதல்வரை டெல்லியில் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடே வியந்து பார்க்கிறது” என்றார்.