ஆவின் நிறுவனத்தில் பால்பண்ணைகளில் இயந்திரங்களை பயன்படுத்தும் பணியாளர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது, பால் பைகள் நிரப்புதல் மற்றும் பால் உபப் பொருட்கள் தயாரிப்பதில் கவனமாக செயல்படுவது, விபத்துக்களை தவிர்ப்பது, கால்நடைகளுக்கு தங்கு தடையின்றி தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை கிடைப்பதை உறுதி செய்தல், பால் உபப் பொருட்கள் தரத்தை உறுதி செய்து நுகர்வோர்களுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் கொண்டு சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையாளர்களின் விற்பனை செயல்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்வது, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ( BMC ) மொத்த பால் குளிர்விப்பு நிலையங்களை கள ஆய்வு செய்தல் கொள்முதல் மற்றும் உள்ளீடு பிரிவு (P&I) செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பொது மேலாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுரை வழங்கினார்.
பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை முறையாக கண்காணித்தல், பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதமின்றி பால் பணப் பட்டுவாடா சரியான கால அளவில் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். பால் பண்ணைகளை சுத்தமாக பராமரித்தல், கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். தண்ணீர் மற்றும் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். விற்பனைப் பிரிவில் நுகர்வோரின் தேவைகளை அறிந்து சந்தைப்படுத்த வேண்டும். நுகர்வோரின் தேவைகளை அறிந்திட கள ஆய்வு மேற்கொண்டு மாவட்டந்தோறும் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். புதிய விற்பனை சந்தைகளை கண்டறிந்து விற்பனையை பெருக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் நியாய விலை கடைகளின் மூலம் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். ஆவின் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப.,, பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர். சு. வினீத் இ.ஆ.ப.,இணை நிருவாக இயக்குநர் க. பொற்கொடி இ.ஆ.ப., பொது மேலாளர் (நிருவாகம்), பொதுமேலாளர் விற்பனை (பொறுப்பு) அவர்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கொள் முதல் பிரிவு, நிருவாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, பொறியியல் பிரிவு, கட்டுமானப் பிரிவு, தர உறுதி, அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் உப பொருட்கள் பண்ணை, மாதவரம் பால் பண்ணை, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, மற்றும் இதர பிரிவுகளை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.