தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரும் ஆண்டில் ஹஜ் பயணம் செல்ல இருப்பதாக பிரசிடெண்ட் அபூபக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை அடுத்து மயிலாப்பூர் கச்சேரி சாலை ஜூம்மா மசூதியில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவில், தேவாலயங்கள்,மசூதிகள் வார இறுதி நாட்களிலும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு நன்றி. மக்கள் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டு செயல்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான பள்ளிகள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவோம்.

2022ம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடக்க இருக்கிறது.  5 ஆயிரம் ஹாஜிகள் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செய்ய திமுக அரசு கலைஞர் ஆட்சிக் காலத்தில் உதவி இருக்கிறது. அப்போது துணை முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின் அவர்கள் விமான நிலையம் வந்து ஹாஜிகளை வழியனுப்பி வைத்தார். அந்த நிகழ்வு இந்தியாவில் அதுவே முதல்முறையாகும் . 2022ல் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். அடுத்த ஆண்டுக்குள் ஹஜ் பயணம் அனைத்தும் முழுமையாக கணினிமயமாக்கப்படும். தமிழகத்துக்கு ஹஜ் ஹவுஸ் இல்லாமல் இருக்கிறது. இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கிறோம்.விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். என்றார்.